Monday, May 3, 2010

டிஜிட்டல் சினிமா பற்றிய கருத்தரங்கமும் - அவர் திரைப்படத் துவக்க விழாவும்


Viscom மாணவர்கள், துணை-இணை இயக்குனர்கள் மற்றும் சிறு தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு தமிழ் திரைப்படமாவது எடுத்துவிட வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் கோடிகளில் பேசப்படும் வியாபாரம் காரணமாக கனவுகள் நனவாகாமல் அப்படியே இருக்கும். இனி அந்த நிலை மாறும். நிச்சயம் நமது சினிமா கனவுகள் பலிக்கும். காரணம் டிஜிட்டல் தொழில் நுட்பம்.

”அவர்” - இசையமைப்பாளராக நான் அறிமுகமாகும் முதல் தமிழ் திரைப்படம். இந்தப் படத்தின் இசை முதல் காமிரா மற்றும் எடிட்டிங் வரை அனைத்தும் டிஜிட்டல் மயம். இதனால் என்ன பலன்? திரைப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி தயாராக வைத்துக் கொண்டால், அதாவது ஸ்கிரிப்ட் ரெடி என்றால், கோடிகள் பற்றிய பிரமிப்பும் பயமும் இல்லாமல் ஒரு அழகான தெளிவான திரைப்படத்தை டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தயாரிக்க முடியும். நாங்கள் அப்படித்தான் பார்த்துப் பார்த்து ”அவர்” திரைப்படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் டிஜிட்டல் தொழில் நுட்பம் பற்றி பலருக்கும் தயக்கமும், பயமும் அதிகமாக இருக்கிறது. காரணம் அது பற்றிய முழுவிபரமும் நமக்கு கோலிவுட்டிலோ, பாலிவுட்டிலோ கிடைக்கவில்லை. ”அவர்” திரைப்படக் குழு கடந்த சில வருடங்களாகவே டிஜிட்டல் தொழில் நுட்பம் பற்றி பல தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறது.

டிஜிட்டல் மியுசிக், டிஜிட்டல் காமிரா, டிஜிட்டல் எடிட்டிங் மற்றும் டிஜிட்டல் புரொஜக்ஷன் உட்பட அனைத்து பிரிவுகளிலும் ”அவர்” திரைப்படக் குழு விபரங்களை சேகரித்து சோதித்து வைத்திருக்கிறது.

இதை உங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ள விருப்பப்படுகின்றோம். இன்று எங்கள் கனவு நனவாகிக் கொண்டிருப்பது போல, உங்கள் கனவும் திரை வடிவம் பெற வேண்டுமல்லவா? அதற்க்காகவே நாங்கள் ஒரு கருத்தரங்கு நடத்துகின்றோம்.

நாங்கள் கற்றதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், இன்னும் பல திறமைசாலிகள் சினிமாவிற்குள் நுழைய வாயப்பு ஏற்படும். அதன் மூலம் தமிழ் சினிமா மேலும் சிறப்படையும் என்பது எங்கள் எண்ணம்.

எனவே ”அவர்” திரைப்படத்தின் துவக்க விழாவை ஸ்டுடியோக்களில் நடத்தாமல், உங்களை அழைத்து ஒரு கருத்தரங்கமாக நடத்துகிறோம். அனைவரும் வாருங்கள்! பங்கு பெறுங்கள்! டிஜிட்டல் தொழில் நுட்பம் பற்றி தெளிவு பெறுங்கள்!

தலைப்பு
”மினிமம் பட்ஜெட்டில் டிஜிட்டல் சினிமா”

நாள் - நேரம்
மே 9, ஞாயிற்றுக் கிழமை, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

விலாசம்
பிளாட் நம்பர் 15,
ஆறுமுகம் நைனார் தெரு,
திருநகர்,
சென்னை - 87.

வழி

வடபழனி ->விருகம்பாக்கம்->ஆழ்வார் திருநகர்-> மெகா மார்ட் பின்புறம், வலது புறத்தில் மூன்றாவது தெரு-> வலப்புறம்15 வது இல்லம்.

தொலை பேசி
விவேக் நாராயண் - 9444166290

கருத்தரங்கில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

Sunday, March 7, 2010

மகளிர் தின இசை


சுஜாதா நினைவு தினத்துக்கு ஒரு சிறப்பு பாடலை உருவாக்கியது போல, மகளிர் தினத்துக்கும் ஒரு பாடலை உருவாக்கலாம் என்று எனது நண்பர் செல்வக்குமார் கூறினார். அதற்க்காக திருமதி.தேனம்மை லட்சுமணன் அவர்களிடம் ஒரு பாடலை எழுதச் சொல்வோம் என்றார். அதன்படியே இமெயிலில் அவருடைய மனதில் தோன்றும் ஏதோ ஒரு சந்தத்தில் எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டேன். பாடல் வரிகள் பெண்மையை ஒரு சக்தியாக வருணித்து எழுதினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இதை சொல்வதற்குள் அன்று மாலையே திருமதி. தேனம்மை ஒரு கவிதையை அனுப்பி விட்டார். மற்ற வேலைகள் காரணமாக அன்று இரவு கவிதையை படிக்க நேரம் இல்லை. காலையில் கவிதையை படித்தபோது ஆச்சரியமாகிவிட்டது. பாடலின் அர்த்தம், நான் நினைத்ததுபோலவே இருந்தது. அதனால் பாடல் வரிகளை படித்த அடுத்த சில நிமிடங்களிலேயே டியுன் உருவாகிவிட்டது. பாடல் ரெக்கார்டிங் மதியம் துவங்கி மாலையே முடிந்துவிட்டது. நண்பர் செல்வக்குமாரிடம் போன் செய்து பாடல் ரெடி வந்து வாங்கிக் கொள் என்று சொன்னேன். பாடலைக் கேட்டு அவருக்கும், எழுதிய திருமதி. தேனம்மைக்கும் சந்தோஷம்.

இந்தப் பாடல் பெண்களின் அன்பையும், எதையும் சாதிக்கக் கூடிய ஆற்றலையும், சக்தியையும் பிரதிபலிக்கக் கூடிய வகையில் உற்சாகமான ஒரு மெட்டில் இசையமைத்து இருக்கின்றேன்.

இந்தப் பாடலை இந்த மகளிர் தினத்தில் உலகப் பெண்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்கின்றேன்.

பாடலை இங்கே க்ளிக் செய்து டவுன்லோடு பண்ணிக் கொள்ளுங்கள்


Sunday, February 28, 2010

சுஜாதாவின் கவிதைக்கு ஒரு இசை

இரண்டு நாட்களுக்கு முன்னர் எனது நண்பர் இயக்குனர் செல்வக்குமார் என்னை போனில் அழைத்தார். நாளை சுஜாதாவின் நினைவுநாள், எனவே அவர் எழுதிய ஒரு கவிதையை இசை அமைக்கலாமா என்று கேட்டார். நானும் சரி என்று சொல்லிவிட்டு அவர் வீட்டுக்குச் சென்று சந்தித்தேன். வழக்கம் போல மிக அவரசம் என்று சுஜாதாவின் கவிதையை ஒரு பிரண்ட் எடுத்து தந்தார். வாசிக்கும் போதே மனதில் ஒரு டியுன் தோன்றியது. அதை பாடிக் காட்டியவுடன் இரவே ரெக்கார்டிங் என்றார். நானும் சரி என்று சொல்லிவிட்டு வண்டியில் ஏறிச் செல்லும்போது யாரோ யாரையே வா என்று அழைத்தது போல இருந்தது. அதைக் கேட்டவுடன் மனதில் வேறு ஒரு டியுன் தோன்றியது. அடுத்த சில நிமிடங்களில் அந்த டியுனையே இசையாக்கி கம்ப்யுட்டரில் ஏற்றினேன்.

டிராக் ரெடி என்ற என்னுடைய போன் காலைக் கேட்டவுடன், செல்வக்குமார் ஒரு பென் டிரைவுடன் வந்தார். இதில் சுஜாதா கவிதைகளைப் பற்றி இணைய நண்பர்கள் பேசிய சில குரல்கள் இருக்கிறது, அதை டியுனில் இணைக்க வேண்டும் என்றார். பிறகு இருவரும் கிட்டத்தட்ட லைவ்வாக பாடலின் இடையில் எங்கள் உரையாடல்களை பதிவு செய்தோம். பிறகு பென் டிரைவில் வந்திருந்த குரல்களை வெட்டி, தேவையான இடத்தில் ஒட்டினோம்.

குழந்தை தொழிலாளர்கள் பற்றிய பாடல் என்பதால், ஒரு குழந்தையின் குரல் இருந்தால் நன்றாக இருக்கும் எனத்தோன்றியது. அதனால் காலையில் ஓ.கே செய்து தருகிறேன் என்று இயக்குனரை அனுப்பிவிட்டு என் மகள் தன்யஸ்ரீயை அழைத்து பாட வைத்தேன். எந்த டிஜிட்டல் மேஜிக்கும் இல்லாமல் வெறும் 8 டிராக்குளில் லேயர் செய்த அந்தப் பாடலை இப்போது நீங்கள் கேட்கலாம். பாடலை பாடியிருப்பது நான், இடையிடையே நானும் இயக்குனரும் பேசியிருக்கிறோம். மற்ற குரல்கள் இணைய தள நண்பர்கள் ஜமால் மற்றும் சுந்தரவதனம். எப்படி இருக்கிறது என்று கேட்டுவிட்டுச் சொல்லுங்கள்.

பாடலை உருவாக்க மொத்தமே 4 மணி நேரம்தான் ஆனது என்பது ஸ்பெஷல் செய்தி.



பாடலை இந்த லிங்கை கிளிக்செய்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.